கரோனா தொற்று பரவலால் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு சொத்து வரி உள்ளிட்ட அம்சங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்.26) முதல் திரையரங்குகள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, கோவையில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சரவணம்பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக மைய வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள திரையரங்குகள், சிங்காநல்லூர், டவுன்ஹால், கல்லூரி சாலை, 100 அடி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உட்பட மாநரின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகள், புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய முதற்கட்ட கரோனா பாதிப்பால், சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன் சமீபத்தில்தான் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது கரோனா பரவலால் மீண்டும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. திரையரங்கு கள் செயல்படாத நிலையில், உரிமையாளர்களுக்கு வருமானம் இருக்காது.
இந்நிலையில் குறைந்த பட்ச மின்சார கட்டணத்தை செலுத்துமாறு கூறினால் என்ன செய்வது? தமிழக அரசு திரையரங்கு களுக்கான சொத்து வரி, நில வரி,மின்சார கட்டணம் ஆகியவற்றிலி ருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.