தமிழகம்

உடுமலையை அடுத்த புக்குளத்தில் திட்டக் காலம் முடிந்த பின்னரும் தொடரும் அடுக்குமாடி குடியிருப்பு: கட்டுமானப் பணி முறையான தகவல்கள் கோரும் பயனாளிகள்

செய்திப்பிரிவு

உடுமலை அருகே புக்குளத்தில் திட்டக் காலம் முடிந்த பின்னரும் தொடரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி எப்போது நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளத்தில், கடந்த 2018 ஏப்.18-ம் தேதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.26.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தரைத்தளத்துடன் சேர்த்து 4 தளங்களை கொண்ட 4 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டப் பணி, கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதி. வீடுகள் அடங்கிய அடுக்குமாடி திட்டப் பணிகள் நிறைவடைந்து வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தில் உள்ள சமூக நலக்கூடம், அங்காடி உள்ளிட்ட கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பயனாளிகள் கூறும்போது, ‘‘உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நீரோடைகளின் கரையோரங்களில் வீடுகள் கட்டி வசித்தவர்கள், நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி அகற்றப்பட்டனர். வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வீடுகள் இழந்தவர்களுக்கு புக்குளம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி, திட்டக் காலம் முடிந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயனாளிகளுக்கு முறையாக எப்போது வீடுகள் ஒப்படைக்கப்படும் என்பது புரியாத புதிராக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் முறையான தகவல்களை வெளியிட வேண்டும்’’ என்றனர்.

குடிசைமாற்று வாரிய பொறியாளர்கள் கூறும்போது, ‘‘கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT