பிரதமர் அறிவித்த உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமே விநியோகிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்தஆட்சியின்போது கரோனா காலகட்டத்தில் விநியோகிக்கப்பட்ட பொருட்கள் சரியான நேரத்திலும், சரியான முறையிலும் மக்களை சென்றடையவில்லை. பொருட் களை பேக்கிங் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து பணம் விரயம் செய்யததோடு 2 மாத காலம் தாமதமாக விநியோகிக்கப்பட்டது.
இம்முறை புதுச்சேரியின் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமே பிரதமர் அறிவித்த 5 கிலோ உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். பேக்கிங் செய்வதற்கு தனியாரிடம் செலுத்தப்படும் தொகையை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகள் மற்றும் வேறு இடங்களில் உணவு தானியங்களை வழங்கினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.
மேலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டுமே தானிய விநியோகத்தில் அனுபவம் இருக்கும்.
மக்கள் குறித்த புள்ளி விவரங்கள் இருக்கும். எனவே அந்தந்த இடத்திற்குட்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமே மக்களுக்கு பொருட்கள் விநியோகிக்க வேண்டும்.
இதில், அரசு ஊழியர்கள் எவ்வித ஊழலில் ஈடுபடாமல் இருக்க ஆளுநர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதத்துக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால் இதற்கான வேலையில் உடனடியாக ஈடுபட்டு பொருட்கள் சரியான நேரத்தில் அனைத்து மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக சார்பில் இது சம்பந்தமாக புதுச்சேரி ஆளுநருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.