வேலூரில் மூடப்பட்டிருந்த சலூன் மற்றும் அழகு நிலையம். படங்கள்: வி.எம்.மணிநாதன். 
தமிழகம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் சலூன், அழகு நிலையங்கள் மூடல்: அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டத்தில் சினிமா திரையரங்குகள், 3 ஆயிரம் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் மூடப் பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஷாப்பிங் மால்கள், சினிமா திரையரங்குகள், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள் போன்ற வற்றை மூட உத்தரவிடப்பட்டது.

அதேபோல், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேநீர் மற்றும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிப்பதுடன், பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் சுமார் 80 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், 3 ஆயிரம் சலூன், அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், சவரத் தொழிலாளர்கள், திரையரங்க ஊழியர்கள் பாதிக் கப்படும் சூழல் மீண்டும் ஏற்பட் டுள்ளது.

மேலும், உணவகங்களில் நேற்று முதல் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டதுடன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. தேநீர் கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது.

பெரிய ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட் கடைகள் மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளனர். வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே உள்ள சாரதி மாளிகையில் கடைகள் தனித்தனியாக இருப்பதால் அவற்றை மூட வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT