வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் மற்றும் அதுதொடர்பான சரக்குகளுக்கு துறைமுக கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன், ஆக்சிஜன் டேங்குகள், ஆக்சிஜன் பாட்டில்கள் மற்றும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் மற்றும் அதுதொடர்புடைய உபகரணங்கள் கப்பலில் கொண்டு வந்தால், அதற்கான கப்பல்கட்டணம், கிடங்கில் சேமித்து வைப்பதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்ய
வேண்டும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சுங்கத்துறை அனுமதி
மேலும், ஆக்சிஜன் ஏற்றி வரும் கப்பல்களை துறைமுகத்தில் நிறுத்த முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும். அத்துடன், துறைமுகத்தில் இருந்து ஆக்சிஜன் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள் அடங்கிய சரக்குகளை துறைமுகத்தில் இருந்து விரைவாக வெளியே கொண்டு செல்வதற்காக, துறை அனுமதியை சுங்கத்துறை விரைவாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.