செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் வீட்டருகே உள்ள கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டுகளை வீசிக் கொலை செய்தது. இதையடுத்து, அவரது பாதுகாவலரான எழிலரசன், அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சுரேஷ்(19) என்பவர் குண்டு பாய்ந்து, அந்தஇடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸார் 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக திருமாறனின் முன்னாள் பங்குதாரரான மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்ன
கிருஷ்ணசாமி மகன் ராஜேஷ்(48) என்பவர் திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை வரும் ஏப்.30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ராஜேஷை போலீஸார் துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.
ஏற்கெனவே திருமாறனை கொலை செய்ய முயன்றதாக இவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.