தமிழகம்

ஏப். 30 நள்ளிரவு வரை புதுச்சேரியல் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: உடனடியாக அமல்

அ.முன்னடியான்

புதுச்சேரியில் வரும் 30-ம் தேதி (ஏப்.30) நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அனைத்து விதமான மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:‘‘புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது, சாராய, கள் கடைகள், எப்எல் 1, எப்எல் 2 சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்கள் என அனைத்து விதமான மதுக்கடைகளும் வரும் 30-ம் தேதி நள்ளிரவு வரை முழுமையாக மூடப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

விதிமுறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறினால் கலால்துறை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’

இவ்வாறு அவர் தெரிவத்துள்ளார்.

SCROLL FOR NEXT