தமிழகம்

கும்பகோணத்தில் ட்ரோன் மூலம் உரம், பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயி

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்களைச் சொந்தமாக வாங்கி தனது விவசாய வயல்களில் ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்கும் பணியில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வயல்வெளியில் தெளிப்பது போல், கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடியைச் சேர்ந்த விவசாயி வெங்கட், ட்ரோன் மூலம் இன்று (26-ம் தேதி) தெளிப்பு முறையைக் கையாண்டார்.

அதன்படி வழக்கத்தை விடப் பெரிய அளவில் தோற்றமளிக்கும் ட்ரோனை ரூ.9 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்த ட்ரோனின் மேலுள்ள கேன்களில் திரவ வடிவிலான இயற்கை உரமான பஞ்சகவ்யம் மற்றும் பூச்சி மருந்துகள் நிரப்பப்படுகின்றன.

பூச்சி மருந்து நிரப்பப்பட்ட ட்ரோன்கள் நவீன ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, வயல்வெளிகளில் பறக்க விடப்படுகின்றன. இவை வயல்வெளிகளில் பறந்தபடியே உரம் மற்றும் பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றன. ஒரு ஏக்கரில் வேலை ஆட்கள் இரண்டு தினங்களில் செய்யக்கூடிய வேலையை, இந்த ட்ரோன்கள் 15 நிமிடங்களில் செய்து முடிப்பதால் இதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி வெங்கட் கூறும்போது, ''நான் பொறியியல் படித்துவிட்டு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயப் பணிகளில் ஈடுபடக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகமாக நிலவி வருகிறது. மேலும் அவர்களின் கூலியும் அதிகமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக இயந்திரம் மூலம் விவசாயப் பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டேன். முதற்கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் வயல்களில் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். மேலும் இந்த ட்ரோன்களை உளுந்து உள்ளிட்ட சிறு தானியங்களை விதைக்கவும் பயன்படுத்தலாம்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்துக் கேள்விப்பட்ட கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் ட்ரோன்கள் மூலம் உரம் தெளிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு, புதிய உத்தியைக் கையாளும் விவசாயிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT