தமிழகம்

சலூன் கடைகளைத் திறக்க அனுமதி கோரி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஜெ.ஞானசேகர்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவோம் என்றும், சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.செல்வராஜ், செயலாளர் பி.தர்மலிங்கம், பொருளாளர் எம்.முருகேசன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமாரிடம் இன்று அளித்த மனு:

''கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் முடி திருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அவதிப்பட்டனர். பசிக் கொடுமை மற்றும் கடன் சுமையால் மனமுடைந்து முடி திருத்தும் தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட துயரங்களும் நேரிட்டன. அந்தப் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீண்டு வரப் போராடி வரும் நிலையில், மீண்டும் சலூன் கடைகளை மூட அறிவித்திருப்பதால் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து, பாதுகாப்புடன் செயல்படுவோம்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் ஸ்ரீரங்கம் நகர நிர்வாகிகள் சண்முகசுந்தரம், ராஜலிங்கம், சங்கர், சுரேஷ் ஆகியோர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரனிடம் இன்று மனு அளித்தனர்.

நாட்டுப்புறக் கலைஞர்களும் மனு

திருச்சி மாவட்ட நாட்டுப்புற, நாதஸ்வரம், நையாண்டி மேளம், கரகாட்டம் ஆகிய கலைக் குழுவின் தலைவர் ஏ.ஆர்.வெள்ளைச்சாமி தலைமையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பலர் பல்வேறு வேடங்களில் மேளதாளம் முழங்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்த மனுவில், ''திருவிழாக்கள், திருமணங்கள் ஆகியவற்றில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தோம். கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரள செண்டை மேளத்தின் வருகையால் எங்களுக்குத் தொழில் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளால் நிகழ்ச்சி நடத்த முடியாமல், வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இந்தத் தொழிலைத் தவிர வருவாய்க்கு வேறு வழி இல்லை. எனவே, எங்கள் தொழிலுக்குக் கூடுதல் தளர்வு அளித்து, கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பதுடன், நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவரையும் நல வாரியத்தில் பதிவு செய்து, அனைவருக்கும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்படும் வரை மாதந்தோறும் ரூ.5,000 வீதம் உதவித்தொகை வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT