படங்கள்: எம். சாம்ராஜ்  
தமிழகம்

புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு; சூழலைப் பொறுத்து ஊரடங்கு முடிவு- ஆளுநர் தமிழிசை பேட்டி  

அ.முன்னடியான்

கரோனா கட்டுக்குள் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், தொற்றின் சூழ்நிலையைப் பார்த்து வரும் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் இருந்து ஆதித்யா மேத்தா என்பவர் தலைமையில் மாற்றுத்திறன் கொண்ட 15 பேர், சைக்கிளில் பயணித்து இன்று (ஏப். 26) புதுச்சேரி வந்தனர்.

ஆளுநர் மாளிகை அருகே வந்த குழுவினரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் வழங்கிய 10 ஆயிரம் முகக் கவசங்களைச் சுகாதாரத் துறையிடம் ஆளுநர் ஒப்படைத்தார்.

ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படவுள்ளது. அதற்காக 28-ம் தேதியே அனைத்து இளைஞர்களும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 45 வயது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி அறிவிக்கும்போது சிறிய தயக்கம் இருந்தது. தற்போது 2-வது அலை அதிகமாக இளைஞர்களைத் தாக்குகிறது. எனவே, இளைஞர்கள் தாங்களாகவே முதலில் பதிவு செய்து தடுப்பூசி எடுத்துக்கொண்டு முன் உதாரணமாகத் திகழ வேண்டும்.

புதுச்சேரியில் 55 மணி நேர முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா கட்டுக்குள் அடங்காமல் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மக்களுக்காக மட்டும்தான் எல்லாத் திட்டங்களும், முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. சில மாநிலங்களில் மருத்துவமனைகள் மற்றும் மயானங்களுக்கு வெளியே வரிசைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலை எந்த மாநிலத்துக்கும் இனி வரக்கூடாது.

அதனால் சில நடைமுறைகளை முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக சில நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். படுக்கை, ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருந்துகள், முகக்கவசம் உள்ளிட்ட அனைத்தும் வேண்டிய அளவு இருக்கின்றன. எதுவும் தட்டுப்பாடு இல்லை.

ஆனால், சிலர் தட்டுப்பாடு இருப்பதாக அறிக்கை கொடுக்கிறார்கள். தயவுசெய்து பொதுமக்களுக்கு அச்சத்தைத் தவிர்த்து, தைரியத்தை ஊட்டுங்கள். புதுச்சேரி மட்டுமல்லாது காரைக்கால், மாஹே, ஏனாமில்கூட காணொலிக் காட்சி மூலம் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணித்து வருகிறோம்.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை முறைப்படுத்துமாறு சிலர் கேட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தனியார் மருத்துவமனைகளுக்கான மருந்தை அரசே கொடுத்து விடுகிறது. தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால்கூட அவர்களை அரசு பாதுகாக்கிறது. எனவே, யாரும் அச்சப்பட வேண்டாம்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் சூழ்நிலையைப் பார்த்து வரும் சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது அதிகம் பேருக்குப் பரிசோதனை செய்கிறோம். இதன் மூலம் அதிக நோயாளிகளைக் கண்டுபிடிக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தற்போது பொதுத் தொண்டு நிறுவனங்களும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளன. பாண்லேவில் ரூ.1-க்கு முகக்கவசம் விற்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புதுச்சேரியில் 95 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளனர். இன்னும் 5 சதவீதம் பேர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீதியுள்ள 5 சதவீதம் பேரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இறை நம்பிக்கை உள்ளவர்கள் கரோனா தொற்று நம்மை விட்டு விலக வேண்டும் என வேண்டிக் கொள்வோம். புதுச்சேரியில் வேண்டிய அளவு ஆக்சிஜன் உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.

எல்லோரும் இணைந்துதான் கரோனாவை வெற்றிகொள்ள முடியும். எனவே, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யுங்கள். வாக்கு எண்ணிக்கையை எச்சரிக்கையாக அரசியல் கட்சியினர் எதிர்கொள்ள வேண்டும்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

SCROLL FOR NEXT