செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகிலன். 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உத்தரவிட்டால் மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடிப்போம்: முகிலன் உறுதி

க.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடிப்போம் என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறினார்.

இதுதொடர்பாக, கரூரில் இன்று (ஏப். 26) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலை அமைப்பது பற்றிய விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமம் நாடு முழுவதும் எண்ணற்ற தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. வேதாந்தா குழுமம் மெடிக்கல் ஆக்சிஜன் தயாரிக்கிறார்களா? தயாரித்து அரசுக்கு வழங்குகிறார்களா? வேதாந்தா குழும தொழிற்சாலைகளில் இருந்து எவ்வளவு ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என தமிழக அரசு கேள்வி எழுப்ப வேண்டும்.

ஆக்சிஜன் ஆலை என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க நடக்கும் சதியை முறியடிக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற காரணத்தை சொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மறைமுகமாக திறக்க மத்திய அரசு துணை போய் வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் ஆலையை இயக்குவதற்கு அரசுக்கு நிபுணத்துவம் கிடையாது. அப்படியே இயக்கினாலும் தரமற்ற ஆக்சிஜன்தான் கிடைக்கும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை வேதாந்தா குழுமம் நேற்று தாக்கல் செய்துள்ளது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாகுறையை காரணம் காட்டி, ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவது போல செய்து கொடுத்து மறைமுகமாக ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை செய்து ஆலையை மீண்டும் தொடங்க துடிக்கும் மறைமுக சதித்திட்டமாகும்.

உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவன வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலை அமைத்து உற்பத்தி செய்யலாம் என உத்தரவிட்டாலும் அதை நிராகரிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஆக்சிஜன் ஆலையை இயக்க வேண்டும் என உத்தரவிட்டால் மக்கள் போராட்டத்தின் மூலம் முறியடிப்போம்".

இவ்வாறு முகிலன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT