தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக இயங்கலாம்; தமிழகத்தின் தேவை போக மற்ற மாநிலங்களுக்கு சப்ளை: கனிமொழி பேட்டி

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தேவைக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கலாம். தமிழகத்தின் தேவைக்கு முதலிடம். அதற்குப் பிறகே மற்ற மாநிலங்களுக்கு சப்ளை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கனிமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயக்குவது சம்பந்தமாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“நாடு முழுவதும் உள்ள கரோனா இரண்டாம் அலை பரவல், அதனால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டும் பயன்படுத்தலாம், வேறு எந்தத் தயாரிப்புக்கோ, அங்கு உள்ளே இருக்கும் வேறு எதையும் பயன்படுத்த அனுமதி தரக்கூடாது. அங்கு ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மின்சாரத்தையும் அரசே வழங்க வேண்டும். அங்கு மின்சாரத்தைத் துண்டித்த அரசே மின்சாரத்தையும் வழங்க வேண்டும்.

இதற்கான நிபுணர் குழு ஒன்றை அரசே அமைக்க வேண்டும். அதில் ஆட்சியர், சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் இடம்பெற வேண்டும். இந்த அனுமதியும் தற்காலிகமே. இது ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே. இதைப் பயன்படுத்தி வேறு எந்த முயற்சிக்கும் அவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. மின்சாரம் தயாரிக்கிறோம் என்பதற்காக வேறு எந்த தயாரிப்புக்கும், நிறுத்தப்பட்ட எதையும் அவர்கள் தயாரிக்கக் கூடாது என்பதால் மின்சாரத்தை அரசே வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அவர்களது டெக்னீஷியன்களை மட்டும் பயன்படுத்தலாம். வேறு எந்தப் பயன்பாடும் இருக்கக்கூடாது. அதேபோன்று தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் முதலில் தமிழக அரசின் தேவைக்குப் பயன்பட்டது போக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பலாம் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக வரும் காலங்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம். டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அதிக தேவை உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என்று தெரிவித்தோம். அதுவும் 4 மாதத்திற்கு தற்காலிகத் தேவைக்கு மட்டுமே. அதன் பின்னர் மூடிவிட வேண்டும் என்பதே நிலைப்பாடு”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT