நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள குடோனில் தேங்கியுள்ள தேயிலைத் தூள். 
தமிழகம்

ஊரடங்கால் லாரிகள் சென்றுவர தாமதம்- நீலகிரி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பு தேயிலைத் தூள் தேக்கம்

செய்திப்பிரிவு

பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 65,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள், குன்னூர் ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கிருந்து லாரிகள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடித்து, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. எனினும், உற்பத்தி செய்யப்படும் பல கோடி மதிப்பிலான தேயிலைத் தூள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் தேயிலை தொழிற்சாலை மேலாளர் சிவானந்தன் கூறும்போது, "தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், பிற மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், லாரிகள் சென்று வர தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT