கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவையிலிருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு வெளியேறத் தொடங்கியுள்ளது தொழில் துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் டெக்ஸ்டைல், பவுண்டரி, வெட்கிரைண்டர், பிளாஸ்டிக், பம்ப்செட், ஆட்டோமொபைல், ராணுவ தளவாட உதிரிபாகங்கள், கப்பல் தயாரிப்புக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு என 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை போக நெசவு, நூற்பாலை தொழில்கள் என தொழில் நிறுவனங்கள் விரிவாக பரவியுள்ளன.
இவற்றின் மூலமாக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழில் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்குவதில் முக்கியப் பங்கு வட மாநில தொழிலாளர்களுக்கு உள்ளது. சுமார் 1 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருவதாக தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது கோவையிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடமாநிலத் தொழிலாளர்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் போக்கானது கோவை தொழில் துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.
இதுகுறித்து டாக்ட் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பால் தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படும் புதிய புதிய கட்டுப்பாடுகள் வடமாநில தொழிலாளர்களை அச்சம் கொள்ளச் செய்கின்றன. அவர்கள் வசிக்கும் மாநிலங்களில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. இதனால் தங்களது மாநிலங்களில் நீண்ட கால ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரலாம் என அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் முன்னர் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று சேர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
கடந்த முறை கரோனா பாதிப்பின் போது ஊருக்குச் சென்றவர்களில் 75 சதவீதம் பேர் தான் திரும்பி வந்தனர். எங்களது சொந்த செலவில் அவர்களை அழைத்து வந்தோம். தற்போது அவர்கள் சென்றால் திரும்பி வருவார்களா, மாட்டார்களா என்பது தெரியவில்லை.
தொழில் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை அவர்கள் தான் நிவர்த்தி செய்கின்றனர். இதனால் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்புவது எங்களுக்கு சிக்கல்தான்.
இதனாலேயே அவர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களில் உள்ள நிலையை எடுத்துக் கூறுகிறோம். இங்கு ஊரடங்கில் நிறுவனங்கள் மூடப்பட்டாலும் ஊதியம் தருவதாக கூறுகிறோம். இப்படி கூறி எத்தனை நாட்களுக்கு அவர்களை தக்க வைக்க முடியும் என்பது தெரியவில்லை. ஒருபுறம் மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஆர்டர்களை முடிக்க இயலாத நிலை வேறு. இதில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால் தொழில் துறையினரின் நிலை அவ்வளவுதான்.
இவ்விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களது அச்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு அரசு நம்பிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொசீமா தலைவர் நல்லதம்பி கூறும்போது, ‘‘தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அங்குதான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதை சொன்னால் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கோவையில் அனைத்து துறைகளிலும் இவர்கள் உள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் சென்றால், தொழில் துறையின் உற்பத்தி பாதிக்கப்படும்,’’ என்றார்.