வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வறண்டு காணப்படும் தெப்பக்குளத்தில் கால்வாய் மூலம் நிரப்ப மாநகராட்சி நிர்வாகமும், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அதிகளவு வரக்கூடிய இடமாக வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் திகழ்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெப்பக்குளம் வறண்டு கிடந்தது. குளத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
அதன் பிறகு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்துக்கு வரும் பாரம்பரிய கால்வாயை மீட்டு தூர்வாரி, தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், அரை நூற்றாண்டுக்குப் பிறகு வைகை ஆற் றில் இருந்து இயல்பாக தண்ணீர் வரத் தொடங்கியது. ஆற்றில் தண்ணீர் வரும் போதெல்லாம் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடல் போல் தண்ணீர் காணப்பட்டது. மேலும் மக்கள் சவாரி செய்ய படகுகளும் இயக்கப்பட்டன. அதனால், மாலை நேரங்களில் தெப்பக்குளத்தில் கூட்டம் அலை மோதியது. சாலையோர வியா பாரம், கேளிக்கை நிகழ்ச்சிகள் என களை கட்டியது. இந்நிலையில், கோடையின் தாக்கத்தால் தெப்பக்குளம் வறண்டு வருகிறது. கரோனா ஊடரங்கு கட்டுப்பாட்டால், ஏற்கெனவே படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், தற்போது தெப்பக்குளம் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் ஆதாரத்துக்காக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரை கால்வாய் மூலம் தெப்பத்தில் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கேற்ப கால்வாயை சுத்தம் செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வரு கிறது.
தெப்பத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டால் சுற்றுப்புறக் குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மாலை நேரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பவும் உதவியாக இருக்கும் என்பதே சுற்று வட்டாரப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.