பார்வதி - சங்கர் (கோப்புப் படம்). 
தமிழகம்

செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொன்று கணவர் தற்கொலை: காவல் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளகிரிப்பட்டு கிராமத்தில் வசித்தவர் சங்கர்(55). இவரது மனைவி பார்வதி(50). சங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில், குடிப்பதற்காக சங்கர் நேற்று முன் தினம் இரவு பார்வதியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு, அவர் பணம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கர், மனைவி பார்வதியை தாக்கி விட்டு, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்து கொலை செய்துள்ளார். மேலும் அவர், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். சங்கர் வீட்டில் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சங்கரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் காவல்துறையினர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்று சங்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தானும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். பின்னர், காவல் துறையினர் சங்கர் வீட்டுக்கு சென்று பார்வதி உயிரிழந்த பார்வதி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அனக்காவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT