கரோனா பணியில் உள்ள மருத்துவர்களுக்கு உணவு, தங்குமிடம், முகக்கவசம், பாதுகாப்பு கவச உடை ஆகியன தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர்.மு.அகிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது கோவிட் இரண்டாம் அலையால் தொற்றின் அளவு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள்,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீண்டும் கரோனா தடுப்பு மையங்களில் (Covid care centre) மாற்றுப்பணியில் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தராத காரணத்தால் வீட்டிலிருந்து வந்துசெல்ல நேரிடுகிறது.இதனால் மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் கரோனா பணிமுடிந்த பிறகு தனிமைப்படுத்துதல் விடுமுறை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மருத்துவர்/ செவிலியர்களின் உடல் மற்றும் மனநலன் கருதி ( Quarantine leave ) விடுமுறையை உறுதிப்படுத்தும்படி வேண்டுகிறோம்.
நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தங்குமிடம் மற்றும் உணவு மறுக்கப்படுவதாக கூறப்படுப்படுகிறது.
இக்குறைகளை களைந்து கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பணியில் உள்ளபோதும், தனிமைப்படுத்தலில் உள்ளபோதும் விடுதியில் தங்குமிடம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் என்.95 (N95) முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிபிஇ (PPE) அனைத்து மருத்துவர்களுக்கும் தடையின்றி கிடைக்க வழிசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.