கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். வீடுகளிலேயே அனைவரும் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை உள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கால் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உட்பட முக்கிய பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் காய்கறி, இறைச்சி, மளிகை சாமான்கள் என வீட்டிற்கு தேவையான பொருட்களை மக்கள் முந்தைய தினமே வாங்கி வைத்திருந்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையம், மற்றும் வடசேரி பேரூந்து நிலையம், மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை, குளச்சல், கருங்கல், திங்கள்நகர் பேரூந்து நிலையங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
சாலைகளில் வாகனங்கள், ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டன. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். கன்னியாகுமரி சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கால் விவேகானந்தர் பாறைக்கான படகு சேவை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் நாகர்கோவில் துணி கடைகள், நகை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. முழு ஊரடங்கிற்கு குமரி மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
அதே நேரம் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ், பெட்ரோல் பங்க் போன்றவை எப்போதும்போல் இயங்கின. ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை, மற்றும் பரிசோதனைகள் வழக்கம்போல் நடைபெற்றன.