கரோனா தொற்றால் சென்னை போலீஸார் 258 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“கரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனத் தணிக்கை பணிகளை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு இன்று (25/4) முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக காவல் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்புகள் அமைத்து, காவல் அதிகாரிகள் தலைமையில் சுமார் 200 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் மற்றும் அவசர ஊர்திகள் தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதியில்லை, கடைகள் திறக்க அனுமதிக்காததால், காவல் அதிகாரிகள் தலைமையில், தங்களது காவல் நிலைய எல்லைக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் ஊரடங்கு காரணமாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் அதைத் தொடர்ந்து வாகன சோதனைகள் நடப்பதை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இன்று காலை ஆய்வு செய்தார். அமைந்தகரை, அண்ணா வளைவு அருகில் உள்ள தற்காலிக வாகன சோதனைச் சாவடியில், காவல்துறையினரின் பணிகள் மற்றும் வாகன சோதனை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம், கையுறைகள் அணிந்தும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்தும், விசாரணை நடத்தும்படியும் அவ்வப்போது திரவ சுத்திகரிப்பானை (சானிடைசர்) பயன்படுத்தவும், அறிவுறுத்தினார்.
இன்றைய முழு ஊரடங்கில் சென்னை நகரில் சுமார் 7,000 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார். திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி சாலையில் பயணம் செய்த 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, காவல் நிலையங்களின் வெளிப்புறங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை காவல்துறையில், இதுவரை 3,609 அதிகாரிகள் மற்றும் போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 3,338 பேர் மருத்துவ சிகிச்சை முடித்து நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர். தற்சமயம் கரோனா தொற்றால் பாதிப்படைந்த 258 காவல்துறையினரில் சிலர் மருத்துவமனைகளிலும், சிலர் கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தங்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 ஆயிரம் போலீஸாருக்கு முதல் சுற்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை சேர்த்து சென்னை காவல்துறையில் 7 நபர்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதும், 6 நபர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல் அலையில் இறந்த காவல் துறையினர் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.
பின்னர், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் அண்ணாநகர் காவல் நிலையங்களுக்கு காவல் ஆணையாளர் நேரில் சென்று அங்கு கரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றப்படுகின்றனவா எனவும் பார்வையிட்டு, காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு அறிவுரைகள் வழங்கினார்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையருடன் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் செந்தில்குமார், இணை ஆணையர்கள் எழிலரசன், எஸ்.ராஜேஸ்வரி, துணை ஆணையர்கள் ஜவஹர், (அண்ணாநகர்), அசோக் குமார் (போக்குவரத்து/மேற்கு) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.