இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக கே.ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக எஸ்.பிரபாகர் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஆணையராக இருந்த காலத்தில் கோயில்களுக்கு சொந்தமான நகைகள், சிலைகள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை வேகப்படுத்தினார்.
இந்த நிலையில், மத்திய அரசு பணிக்கு செல்ல எஸ்.பிரபாகர் விருப்பம் தெரிவித்ததால், மத்திய ஆதார் ஆணையத்தின் மண்டல அலுவலக பணிக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநர் ராஜாமணிக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக முழு கூடுதல் பொறுப்பில் அவர் நியமிக்கப்படுவதாக தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி, கோவை மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கே.ராஜாமணி என்பது குறிப்பிடத்தக்கது.