தமிழகம்

மதுரையில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது; மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: நேரலையில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் திருக்கல்யாண நிகழ்வுகள் கோயில் இணையதளத்திலும், டி.வியிலும் நேரலையாக ஒளிபரப்பானது.

கரோனா 2-வது அலையால், பிரசித்திபெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவை கோயில் வளாகத்திலேயே நடத்த தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கோயில் வளாகத்தில் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கி
யது. அதனைத் தொடர்ந்து காலை,மாலையில் ஆடி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மீனாட்சிஅம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் உலா வந்தனர்.

இந்நிகழ்வு முடிந்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அத
னைத் தொடர்ந்து 8-ம் நாளான ஏப். 22-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் மலர்களால் ஆன மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமியாக செந்தில் பட்டர், அம்மனாக ஹலாஸ் பட்டர் ஆகியோர் மாலை மாற்றிக் கொண்டனர்.

பின்னர், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு 8.47 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், தங்கக் கிண்ணத்தில் சந்தனமும், தங்கச் செம்பில் பன்னீரும் தெளிக்கப்பட்டு, தங்கத்தட்டில் தீபாராதனை காட்டப்பட்டது.

இத்திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரலையாக தரிசிக்கும் வகையில் கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டது. பக்தர்கள் யாரும் வராதவாறு கோயிலைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பில்
ஈடுபட்டனர். திருக்கல்யாணத்தின்போது, ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டில் இருந்தபடியே புதுத் தாலி மாற்றிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று சட்டத்தேர் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும். ஏப்ரல்26-ம் தேதி சுவாமி புறப்பாடுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்த பட்டர்கள்.

SCROLL FOR NEXT