மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருச்சி கோட்டாட்சியருமான என்.விசுவநாதனிடம் இன்று (ஏப். 24) மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
"திருச்சி மேற்குத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் மேல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மேல் உள்ள தளத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவத்தினர் தங்கியுள்ளனர். அவர்கள் மடிக்கணினி, செல்போன் பயன்படுத்துவதால் அவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அங்கேயே தங்கியிருப்பதும், தொடர்ந்து மடிக்கணினியைப் பயன்படுத்துவதும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக உள்ளது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்நிலையில், நேற்று (ஏப். 23) வாக்கு எண்ணிக்கை அறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், இன்று (ஏப். 24) அதிகாலை 3 மணியளவில் பாதுகாப்பு அறைக்கு மேல் உள்ள தளத்தில் மடிக்கணினியை வைத்துப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் திமுக முகவர்கள் வினவியபோது, மடிக்கணினி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
தங்கள் அனுமதியின்றி மடிக்கணினியை எடுத்துச் செல்ல பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் எப்படி அனுமதி அளித்தனர். இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாறுதலைச் செய்திருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே, இன்று அதிகாலை அந்த ஊழியர்கள் பயன்படுத்திய மடிக்கணினியைப் பறிமுதல் செய்து பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும். இதுபோன்று சந்தேகத்துக்குரிய வகையிலான நிகழ்வுகள் இனி நேரிடாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்".
இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.