சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் வாகனம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக ஆட்சியர் உயிர் தப்பினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருப்பவர் மதுசூதனன் ரெட்டி. சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையராகப் பதவி வகித்த அவர் சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கரோனா தொற்று தமிழகத்தில் பரவி வரும் நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி இன்று ஆய்வு நடத்தினார்.
பின்னர், சிவகங்கை மாவட்ட கரோனா தொற்று நிலை, எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், செய்யப்படும் பரிசோதனைகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 53 என்கிற எண்ணிக்கையில் கரோனா தொற்றுடையோர் பாதிக்கப்படுவதாகவும், தினமும் 1500 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியராக மட்டுமல்லாமல், மாவட்டத் தேர்தல் அலுவலராகவும் மதுசூதனன் ரெட்டி இருப்பதால் பேட்டி அளித்த பின்னர் சிவகங்கையிலிருந்து காரைக்குடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அழகப்பா பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஆய்வு செய்ய காரில் சென்றார்.
காளையார்கோவில் அருகே ஆட்சியரின் கார் சென்றபோது காலக்கண்மாய் என்ற இடத்தில் எதிரே திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக இடதுபுறம் திருப்பியபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் கார் பக்கவாட்டில் கவிழ்ந்தது. காருக்குள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிக்கிக்கொண்டார்.
இதில் நல்வாய்ப்பாக பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் சிறு காயங்களுடன் ஆட்சியர் தப்பினார். கார் ஓட்டுநர், பாதுகாவலர், உதவியாளரும் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஆட்சியருக்கும், காரில் வந்த மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.