உதகையை அடுத்த பெந்தட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் மழை வெள்ளம் புகுந்ததால், 70 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிகள் நீரில் மூழ்கின.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப். 23) இரவு முதல் இன்று (ஏப். 24) அதிகாலை வரை இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனிடையே, உதகையை அடுத்த பெந்தட்டி கிராமத்தில் அதிகாலை கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த வெள்ளைப் பூண்டு, முட்டைகோஸ் உட்பட சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த வெள்ளைப் பூண்டு தோட்டத்திற்குள், காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் வெள்ளைப் பூண்டு மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன.
சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் இருந்த காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தோட்டக்கலைத் துறையினர் முழுமையாக ஆய்வு மேற்கொண்,டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. கோடநாட்டில் 39, கல்லட்டியில் 29, மசினகுடியில் 16.2, கீழ் கோத்தகிரியில் 9.4, கிளன்மார்கனில் 5 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.40 மி.மீ. மழை பதிவானது.