தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்த ஒரு பெண் அபராதம் செலுத்த மறுத்து, போலீஸாரை அவமரியாதையாக பேசியதுடன், ஆட்சியர் குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசியதால், அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டநிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் போலீஸார் தலா ரூ.200அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் புதியபேருந்து நிலையம் அருகே நேற்றுமுன்தினம் மாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தி, அபராதம் செலுத்தும்படி கூறினர்.
ஆனால், அந்தப் பெண் அபராதம் செலுத்த மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த போலீஸாரையும், மாவட்ட ஆட்சியர் குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை போலீஸார் வீடியோ எடுப்பதைப் பார்த்த அந்தப் பெண், “வீடியோ எடுத்து முகநூலில் போடப் போகிறாயா? போடு, நானும் ரவுடிதான்.. ஜெயிலுக்கு அனுப்புறியா அனுப்பு... எனக்கொன்னும் பிரச்சினை இல்ல” எனக் கூறி மிரட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், மருத்துவக் கல்லுாரி போலீஸார், அந்தப் பெண் மீது பொது இடங்களில் தகாத வார்த்தைகளில் பேசியதாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.