கோவை ஆர்.எஸ்.புரம் புதிய பூ மார்க்கெட் வளாகத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

பழைய இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க: புதிய பூ மார்க்கெட் வளாகம் தற்காலிகமாக திறப்பு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை தடுக்கும்விதமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க கோவை புதிய பூ மார்க்கெட்டில் தற்காலிகமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்கு 150 கடைகள் வரைஉள்ளன. கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள்மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்துபூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நாள்தோறும் 20 டன் முதல் 30 டன் பூக்கள்வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து பூக்கள் கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்நிலையில், பூ மார்க்கெட்டில் இடப் பற்றாக்குறை நிலவியதை தொடர்ந்து, தற்போதைய பூ மார்க்கெட்டுக்கு எதிரில் மாநகராட்சி சார்பில், ரூ.70 லட்சம் செலவில் 95 கடைகள் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் ஏற்கெனவே நிறைவு பெற்று, கடைகள் திறக்க தயார் நிலையில் இருந்தன. மாநகராட்சி சார்பில் ஏலம் அடிப்படையில் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துவரு கிறது. அதன் ஒருபகுதியாக பூ மார்க்கெட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, புதிய மார்க்கெட் வளாகத்தை தற்காலிகமாக திறக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பழைய பூ மார்க்கெட்டில் இருந்து 50 சதவீத கடைகள் புதிய பூ மார்க்கெட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “பழைய பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை புதியமார்க்கெட்டில் கடைகள் தற்காலிகமாக செயல்படும்.

வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆரம்பத்தில் கூட்டம் குறைவாக இருந்தாலும், சில தினங்களில் வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும்” என்றனர்.

SCROLL FOR NEXT