திருப்பூர் மாநகராட்சி டிஎஸ்கேமகப்பேறு அரசு மருத்துவமனையில், கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் நேற்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
கரோனா இரண்டாம் அலையால் பொதுமக்களிடையே தொற்று தொடர்பான அச்சம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதனால், பலரும் தாமாகவே தடுப்பூசி போட முன்வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் - அவிநாசி சாலையிலுள்ள டிஎஸ்கே மகப்பேறு அரசு மருத்துவமனையில், பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று தடுப்பூசி போட திரண்டனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்தது.
இதற்கிடையே, திடீரென தடுப்பூசி இல்லை என மருத்துவமனைநிர்வாகம் தெரிவிக்கவே, தடுப்பூசி போட காத்திருந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு போலீஸார் சென்று விசாரித்தனர்.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டு மென அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், இதற்காக வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு வந்தால் தடுப்பூசி இல்லை என்கின்றனர்.எங்களின் வருவாய் பாதிக்கிறது. பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினர்.
வாக்குவாதம் செய்தவர்களை போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் சமாதானம் செய்தனர். அதன்பிறகு இரண்டாம் கட்ட டோஸ் 60 பேருக்கு போடப்பட்டது.