உடுமலையில் பிரதான சாலையில் சேதமான பாதாள சாக்கடை குழாயின் கான்கிரீட் மூடியை சீரமைக்கும் பணி தாமதமாவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 6 ஆண்டுகளாகியும், தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் குழாய் உடைவதாகவும், கழிவு நீர் சாலைகளில்ஓடுவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், உடுமலை - தாராபுரம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் சென்று வருகின்றன. கடந்த சிலநாட்களுக்கு முன் பாதாள சாக்கடை குழாயின் மூடி உடைந்து நொறுங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும், இன்னும் சரிசெய்யப்படவில்லை. குழியில் வாகனங்கள் விழுந்து விடாமல் தடுக்க, அந்த இடத்தில் ஆளுயுர இரும்பு பேரல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேரல் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே, தொடர்புடைய துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்றனர்.
நகராட்சி பொறியாளர் தங்கராஜ் கூறும்போது, "பிரச்சினைக்குரிய இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றிய பின்னர், குழாயின் மூடி பொருத்தப்பட வேண்டியுள்ளது. அதற்காக காலதாமதமாகியுள்ளது. விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.