தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் வழக்கமான வெப்பநிலையானது 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக உணரப்படும். அதன் காரணமாக பிற்பகல் முதல் அடுத்த நாள் காலை வரை புழுக்கம் அதிகமாக இருக்கும்.
மழை வாய்ப்பு
மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
26, 27-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றார்.