செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும், சென்னை அணுமின் நிலையம் சார்பில் சுற்றுப்புற கிராமங்களில் கல்வி மேம்பாடு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், `ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், சென்னை அணுமின் நிலைய சமூகப் பொறுப்பு திட்டத்தின் மூலம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 17-வது வார்டு பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் வசிக்கும் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு கழிப்பறை அமைக்க சென்னை அணுமின் நிலையம் ரூ.10.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அடைக்கலம் அறக்கட்டளையுடன் 2020 நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டு, கழிப்பறை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, அணுமின் நிலைய இயக்குநர் எம்.னிவாஸ், மக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறைகளைத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக பொறுப்புக் குழு தலைவர் சுபா மூர்த்தி, துணைப் பொதுமேலாளர் (மனித வளம்) மாலதி கோபால்,மேலாளர் சீனிவாசன், அறக்கட்டளை நிர்வாகி முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.