தமிழகம்

கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: வேளாண் துறை செயலரிடம் வியாபாரிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காய்கறி ஏற்றி வரும் லாரிகளுக்கு, ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றுகோயம்பேடு சந்தை வியாபாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

இது தொடர்பாக, கோயம்பேடு பெரியார் காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி.ராஜசேகர், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், கிருஷ்ணகிரி, ஓசூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேட்டுப்பாளையம், பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன.

வரும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அன்று அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளைநிலங்களில் உள்ள காய்கறிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை பறிக்கப்பட்டு, அன்று இரவுக்குள் கோயம்பேடு சந்தைக்கு வந்தால்தான், திங்கள்கிழமை பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கும்.

எனவே, ஞாயிற்றுக்கிழமையன்று காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளை தடை செய்யக்கூடாது. தோட்டங்களில் ஞாயிறன்று காய்கறிகளைப் பறிக்கவும் அனுமதிக்க வேண்டும். காய்கறிகள் அத்தியாவசிய மற்றும் அழுகும்பொருள் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மேற்கூறிய இவ்விரு பணிகளுக்கும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT