ரயில், பஸ் போக்குவரத்து, மின்சாரம் துண்டிப்பு- தென் மாவட்ட ரயில்கள் ரத்து
இரண்டு நாட்களில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் தலை நகர் சென்னை உள்ளிட்ட வடமாவட் டங்கள் வெள்ளத்தில் தத்தளிக் கின்றன. ரயில், பஸ் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் வெள்ளத் தில் மூழ்கியதால் தென்மாவட்டங் களுக்கு செல்லும் 12 ரயில்களும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் 3 ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டி ருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் பெய்த கனமழையால் 5 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து பெருமளவு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அத்துடன் மழை நீரும் சேர்ந்ததால் சாலைகள் ஆறுகளாக மாறின. தெருக்களில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாம்பரம் அருகே பெருங்களத்தூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கும் ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் சூழ்ந்தது.
தாம்பரம் செங்கல்பட்டு இடையே பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், செங்கல் பட்டிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப் பட்டனர். பின்னர், மாற்றுப் பாதை யில் வாகனங்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் பூந்த மல்லி, வாலாஜாபாத், ஒரகடம், செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. தென்மாவட்டங் களுக்கு செல்லும் வாகனங்கள் ஈசிஆர் சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டன.
மேலும், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில் போக்குவரத்தும் தடைபட்டது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முத்துநகர், ராமேசுவரம், மலைக்கோட்டை, உழவன், மன்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட 11 எக்ஸ்பிரஸ் ரயில்களும், எழும்பூர் மங்களூரு எக்ஸ்பிரஸ், ஹவுரா, புதுடெல்லி, விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இடைவிடாது மழை பெய்துகொண்டே இருந்ததால் வெள்ளம் வடிய வழியின்றி மேலும் அதிகரித்தது. சாலைகள் எல்லாம் ஆறுகளாக மாறியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டதால் சென்னை, புறநகர் பகுதிகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் சாலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்குகூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஒருநாள் மழையிலேயே வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும். ஓரிரு பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக் கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 3, 4 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.