மதுரையில் நேற்று அதிகாலை வீடு மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி சோலையழகுபுரம் திருப்பதி நகர் 1-வது தெருவுக்கு சிறுவர்கள் அடங்கிய 10 பேர் கும்பல் நேற்று அதிகாலை வந்தது.
அவர்கள் திடீரென சாலை யோரம் நின்றிருந்த ஆட்டோ, வேன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனங்களைச் சேதப் படுத்தினர்.
பின்னர் ‘யாராச்சும் எங்களோட மோத நினைச்சா கொளுத்தி விடுவோம்.' என மிரட்டியபடியே அக்கும்பல் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் தடயங்களை சேகரித்தனர். இந்தத் தாக்குதலில் வீடுகள் சேதமடை யவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு பக்கத்து தெருவைச் சேர்ந்த 4 பேர், திருப்பதி நகர் முதல் தெருவில் ஒரு வீட்டுக்கு அருகே அமர்ந்து புகைப்பிடித்தனர்.
அவர்களை நாய் ஒன்று கடிக்க வந்தது. ஆத்திரமடைந்த அவர்கள் அந்த நாயை விரட்டி கல்லால் தாக்க முயன்றபோது, பெண்கள் உட்பட அப்பகுதியினர் திரண்டு அக்கும்பலை விரட்டி அடித்தனர்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட 4 பேரும் குடி போதையில், தங்கள் நண்பர்களை அழைத்து வந்து அப்பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி வாகனங்களைச் சேதப்படுத்தி ரகளை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது.
அவர்கள் ரவுடிகளாக இருக் கலாம் என்பதால் போலீஸார் அக்கும்பலைத் தேடி வருகின்றனர்.