பந்தலூர் அருகேயுள்ள நெல்லியாளம் பகுதியில் ‘நெல்லியாளம் ராணி கோட்டை’ பாதுகாக்கப்படாததால் தற்போது எச்சங்களே மிஞ்சியுள்ளன. இந்த கோட்டையை பாதுகாத்து சுற்றுலா ஸ்தலமாக மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் போன்ற பகுதிகள் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலம்பூர் மற்றும் மைசூர் மகாராஜாக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. சுமார் 400 ஏக்கர் மைசூர் மகாராஜா கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பஜங்கராஜா நெல்லியாளம் ராஜாவாக இருந்துள்ளார். இவர் நெல்லியாளம் கோட்டகுன்னு பகுதியில் ஒரு கோட்டையை கட்டியுள்ளார். உம்மத்தூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த போரம்மா என்பவரை மணந்தார். திருமணத்துக்குப் பின் போரம்மா நெல்லியாளம் ராணியாக அறிவிக்கப்பட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் தங்களது உறவினரின் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். ராஜாவின் மறைவுக்குப் பின் அரசை நடத்த முடியாமல் திணறிய ராணி, தங்களது சொத்துக்களை அப் பகுதியில் உள்ள மக்கள் பலருக்குப் பரிசாக அளித்துள்ளார். பின், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் மைசூருக்குச் சென்றுவிட்டனர்.
கர்நாடக கட்டிடக் கலை
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தற்போது நெல்லியாளம் பகுதியில் வசித்து வருகின்றனர். எனினும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நெல்லியாளம் ராணியின் கோட்டையில் யாரும் வசிக்காத நிலையில் தற்போது இடிந்து போயுள்ளது. கர்நாடக கட்டிடக் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது இடிந்து போயுள்ளது. ஒரு சில சுவர்களும், நீச்சல் குளம் மட்டும் இன்றும் உள்ளன. இந்த கோட்டையில் எஞ்சியிருந்த பாரம்பரியம், கலை நயமிக்க மரத்தால் செய்யப்பட்ட தூண்கள் மற்றும் கல் தூண்கள் அனைத்தும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2005-ம் ஆண்டு வாங்கிச் சென்றுள்ளனர்.
தற்போது இந்த கோட்டையின் வெளிப்புறத்தில் உள்ள சிவலிங்கம், லட்சுமி கோயில் மற்றும் நந்தி சிலையை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு சென்று நெல்லியாளம் ராணியின் கோட்டை குறித்து தகவல்களை சேகரித்துச் செல்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டையை அரசு எடுத்து பராமரித்தால், இப் பகுதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது.
இதன்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகின்றனர்.