சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி. அருகில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல்.   
தமிழகம்

சிவகங்கை மருத்துவமனையில் 10,000 லி., திரவ ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10,000 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் தடுப்பூசி, படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். அவர் ஆக்ஸிஜன் சேமிப்பு தொட்டி, கரோனா வார்டு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் சராசரியாக தினமும் 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தினமும் 53 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இன்றைய நிலையில் 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 320 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் 122 மையங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். காய்ச்சல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 50,475 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 9 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. மேலும் 2 நாட்களில் 12 ஆயிரம் தடுப்பூசிகள் வரவுள்ளன. இதனால் தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பில்லை. சிவகங்கை அரசு மருத்துவமனையில் 270 மருத்துவர்கள், செவிலியங்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இங்கு 10 ஆயிரம் லிட்டர் (10 கிலோ லிட்டர்) திரவ ஆக்ஸிஜனை சேமிக்கும் தொட்டி உள்ளது. இதில் தொடர்ந்து 100 சதவீதம் இருப்பு இருக்கும் வகையில் கண்காணித்து வருகின்றனர். ஒரு லிட்டர் திரவ ஆக்ஸிஜனில் 840 லிட்டர் ஆக்ஸிஜன் வாயு கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. இதேபோல் கரோனா சிகிச்சை பெறும் மற்ற இடங்களிலும் தேவையான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன, என்று கூறினார்.

ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, மருத்துவமனை நிலைய அலுவலர் மீனா, உதவி அலுவலர்கள் ரபீக், மிதின்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT