தமிழகம்

ஏழை மக்களுக்காக பத்து ரூபாய்க்கு மதிய உணவு: புதுச்சேரி அரசு  மீண்டும் தொடக்கம்

செ. ஞானபிரகாஷ்

ஏழை மக்களுக்காக பத்து ரூபாய்க்கு மதியத்தில் உணவு தரும் முறை புதுச்சேரியில் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த கரோனா காலத்தின் போது புதுச்சேரியில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு தரும் பணி நடந்தது. இப்பணியில் உழவர்கரை நகராட்சி ஈடுபட்டது. குறிப்பாக ஏழை மக்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் பயன்பெற்றனர். பின்னர் இத்திட்டம் தொடரவில்லை.

இந்நிலையில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் குறைந்த விலையில் சுத்தமான மதிய உணவு தரும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று துவக்கி வைத்தார்.

இதுபற்றி அரசு தரப்பில் கூறுகையில், "கரோனா காலத்தில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஏழை மக்களுக்கு உணவு தரும் முறையை துவக்கியுள்ளோம். புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இப்பணியை துவக்குகிறோம். பத்து ரூபாய்க்கு சுத்தமான மதிய உணவு தரும் பணியை துவக்கியுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

முதல் நாளில் சாம்பார் சாதம், காய் தரப்பட்டது. முன்பு போல் தினமும் வெஜ்பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம் என பலவகையான சாதம் தரும் திட்டமுள்ளதா, தொடர்ந்து மதியத்தில் சாதம் தரும் பணியை பல இடங்களில் விரிவுப்படுத்துவீர்களா என்ற விவரம் கேட்டதற்கு," விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT