தமிழகம்

வாக்காளர்களுக்கு ரூ.5.48 லட்சம் பட்டுவாடா செய்ய மிரட்டல்: சொந்தக்கட்சி வேட்பாளர் மீதே வழக்கு தொடர்ந்த அதிமுக நிர்வாகி 

செய்திப்பிரிவு

ரூ.5.48 லட்சம் பணத்தைக் கொடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யும்படி மிரட்டியதாக பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் அவரது மகன் போலீஸ் டி.எஸ்.பி க்கு எதிராக அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள இடக்குடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரும், அதிமுக-வைச் சேர்ந்தவருமான தங்கமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ பவுன்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரும், கும்பகோணம் போலீஸ் டிஎஸ்பி-யான அவரது மகன் பாலகிருஷ்ணுனும் தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பு எனது வீட்டுக்கு வந்து, 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யும்படி கூறினர்.

அதற்கு நான் மறுத்ததால் என் மீது பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டினர். இதுசம்பந்தமாக பூம்புகார் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதனால், அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் மீதும், அவரது மகன் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, குற்ற விசாரணை முறை சட்ட பிரிவின் படி, மனுதாரர் முதலில் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுக வேண்டும், ஆகவே தகுந்த கீழமை நீதிமன்றத்தை அணுகி நியாயம் பெறலாம் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.

SCROLL FOR NEXT