தமிழகம்

குப்பைகளோடு 10 சவரன் நகைப்பையையும் போட்டுச் சென்ற பெண்: நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: கமிஷனர் பாராட்டு

செய்திப்பிரிவு

குப்பைகளுடன் தவறுதலாக 10 சவரன் நகைப்பையையும் போட்டுச்சென்ற பெண்ணின் நகைகளை நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கும், சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த பெண் பணியாளரையும் காவல் ஆணையர் பாராட்டினார்.

கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு பாராட்டு

சென்னை, ராயபுரம், ஆஞ்சநேயர் நகர், ஆடு தொட்டி 9வது தெருவில் வசிக்கும் மோகனசுந்தரம்,(55), சென்னை மாநகராட்சி, மண்டலம் 4 ல் துப்புரவவாளராக பணி செய்து வருகிறார். மோகனசுந்தரம் நேற்று (22.4.2021) காலை, கொருக்குப்பேட்டை, ரங்கராஜபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை சேகரித்துக் கொண்டு, கண்ணன் ரோடு ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துள்ளார். அப்போது, ஒரு பையில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. உடனே, மோகனசுந்தரம் மேற்படி தங்க நகைகளை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அதே நேரம் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ரங்கராஜபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் முனியம்மா(47) என்பவர் தனது மகளுக்கு நேற்று திருமணம் வைத்திருந்ததாகவும், திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த 10 சவரன் எடை கொண்ட தங்க நகைகளை காணவில்லை என கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்தார்.

கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீஸார் முனியம்மாளிடம் விசாரணை நடத்தினர். மோகனசுந்தரம் ஒப்படைத்த தங்க நகைகள் மற்றும் முனியம்மாள் கொடுத்த தங்க நகைகளின் விவரங்களை ஒப்பிட்டு முனியம்மாளிடம் விசாரித்தபோது, சோமசுந்தரம் ஒப்படைத்த நகைகள் முனியம்மாளின் தங்க நகைகள் என தெரியவந்தது. மேலும், விசாரணையில், முனியம்மா திருமணத்திற்காக வீட்டிலிருந்து தங்க நகை அடங்கிய பையை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார், அப்போது போகும் வழியில் வீட்டிலிருந்த குப்பைகளை கொட்டிவிட்டுச் செல்லலாம் என்று குப்பைகளையும் கையில் எடுத்துச் சென்றுள்ளார்.

குப்பையை குப்பைத்தொட்டியில் கொட்டும்போது மேற்படி தங்கநகைகள் அடங்கிய பையையும் தவறுதலாக குப்பைகளோடு சேர்த்து குப்பை தொட்டியில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளார். அப்பகுதியில் சேகரித்த குப்பைகளை எடுத்துச் சென்ற மோகனசுந்தரம் குப்பைகளை தரம் பிரிக்கும்போது, தங்க நகைகள் அடங்கிய பையை கண்டெடுத்து, நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அறிவுரைக் கூறி தவறுதலாக குப்பைத்தொட்டியில் போட்ட 10 சவரன் தங்க நகைகளை முனியம்மாளிடம் ஒப்படைத்தனர். நகைகளை நேர்மையாக ஒப்படைத்த மாநகராட்சி ஊழியரை போலீஸார் பாராட்டி அவரது செயல் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர்.

துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் கிடந்த 1 சவரன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளருக்கு பாராட்டு

சென்னை, கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் வசிக்கும் கோபி என்பவரின் மனைவி ராணி (37), என்பவர் பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ராணி பெருங்குடி, ராஜிவ்காந்தி நகர் 4 வது தெருவில் உள்ள பூங்கா அருகே துப்புரவு பணி மேற்கொண்டிருந்தபோது, தெருவில் சுமார் ஒரு சவரன் எடை கொண்ட தங்கச்சங்கிலியை கண்டார்.

பின்னர் தங்கச்சங்கிலி குறித்து அக்கம்பக்கத்தில் கேட்டபோது, யாரும் உரிமை கோராததால், ராணி மேற்படி தங்கச்சங்கிலியை அவரது மேற்பார்வையாளர் மணிவேல் என்பவரிடம் ஒப்படைத்து விவரங்களை கூறிய பின்னர் இருவரும் நேற்றுதுரைப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சரவணனிடம் 1 சவரன் தங்கச்சங்கிலியை ஒப்படைத்தனர்.

இருவேறு சம்பவங்களில் குப்பை தொட்டியில் மற்றும் தெருவில் கிடந்த தங்க நகைகளை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய துப்புரவு தொழிலாளர்கள் மோகனசுந்தரம் மற்றும் ராணி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

SCROLL FOR NEXT