முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் அனைவரையும் பாதித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது.
பொதுவெளிக்குத் தேவையின்றி வருதல், முகக்கவசம் உள்ளிட்டவை கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், பொதுவாழ்வில் உள்ள விஐபிக்கள் இதைத் தவிர்க்க இயலாமல் போகிறது. கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள், வேட்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தல் முடிவு தெரியும் முன்னரே கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானார்.
தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்தததால் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை, ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.