தமிழகம்

கமல் வசிக்கும் தெருவில் மின்தடை: நிர்வாகம் விளக்கம்

உதவ் நாயக்

சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டதற்கும் நடிகர் கமல்ஹாசன் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மழை பாதிப்பால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததே மின்விநியோகத் தடைக்கு காரணம் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் தரப்பு கூறும்போது, "நடிகர் கமல்ஹாசனை குறிவைத்து எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.

அந்தப் பகுதியில் வெள்ளநீர் தேங்கி இருந்தது. அதனால் மழையின்போது அறுந்துவிழுந்த மின்கம்பிகளை சரி பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதற்கும் நடிகர் கம்ல்ஹாசன் கூறிய கருத்து காரணமாக பழிவாங்கல் நடந்ததாக எழும் பேச்சுக்கும் தொடர்பே இல்லை." என்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் மழை பாதிப்பின்போது துண்டிக்கப்பட்ட மின்விநியோகம் செவ்வாய்க்கிழமை மாலை சரி செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கடந்த 8 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். அவர்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் எல்டாம்ஸ் சாலையில் மின்விநியோகம் அளிக்கப்படாததற்கு நடிகர் கமல்ஹாசனின் அலுவலகம் அங்கு இருப்பதே காரணம் என்ற போக்கிலான பேச்சு நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து இத்தகைய பேச்சுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த விளக்கத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் அளித்துள்ளது.

முன்னதாக, சென்னையில் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை குறிப்பிட்டு தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் சிதைந்துகிடப்பதாக நடிகர் கமலஹாசன் கருத்த தெரிவித்திருந்தார்.

அரசு தரப்பிலிருந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையை கிளப்பிய கமலஹாசனின் கருத்தை கடுமையாக கண்டித்திருந்தார் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

SCROLL FOR NEXT