மதுரை மாநகராட்சியில் கொசு மருந்து வாங்கியதாக போலியாக பில் தயாரித்து ரூ.88.88 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் நகர் நல அலுவலர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் நகர் நலப் பிரிவில் கொசு மருந்து வாங்கியது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின்கீழ் ஒருவர் தகவல் பெற்றிருந்தார். இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் மாநகராட்சி அலுவலகத்தில் கொசு மருந்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, ‘கெர்ன்பா’ என்ற நிறுவனத்தில் இருந்து மருந்து வாங்கியதாகப் பெற்ற பில் மற்றும் ரசீதுகளை அந்நிறுவனத்துக்கே சென்று ஆய்வு செய்தனர். அந்நிறுவனத்தின் பெயரில் போலியான பில் தயாரித்து, 2012 ஜூன் முதல் 2018 ஜூலை வரை ரூ.88.88 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அப்போதைய மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலராக இருந்த வி.சதீஸ் ராகவன், உதவி நகர் நல அலுவலர் பார்த்திபன், மத்திய சுகாதார நலஅலுவலக அலுவலர்கள் மாலினி, குணசேகரன், அப்துல் கரீம், இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 17-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சென்னையில் உள்ள சதீஸ் ராகவன், சேலத்தில் உள்ள பார்த்திபன் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை செய்து சில ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘இம்முறைகேடு தொடர்பாக கொசுமருந்து விநியோகம் செய்த தனியார் நிறுவனத்துக்கு நேரில் சென்றுவிசாரித்தோம். மதுரை மாநகராட்சிக்கு நாங்கள் 2012 முதல் 2018 வரை கொசு மருந்து எதுவும் விநியோகம் செய்யவில்லை. எங்கள் நிறுவனத்தின் லெட்டர் பேடுபோலியாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
கையால் எழுதிய பில்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னரே முறைகேடு நடந்ததை உறுதி செய்து தொடர்புடைய 2 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை செய்தோம். இதில் மேலும் சில முன்னாள் அலுவலர்கள் சிக்கலாம் என்றனர்.