கும்பகோணம் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் து.ராமநாதன் (63).எண்ணெய் வியாபாரியான இவரது வீட்டுக்கு கடந்த 15.3.2020 அன்று இரவு பத்திரிகை கொடுப்பதுபோல வந்த 5 பேர், ராமநாதனை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, அவரது மனைவி விஜயாவை தாக்கி, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, கும்பகோணம் ஆழ்வான்கோயில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டியன், மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன், தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சன், வினோத், பாலாஜி ஆகிய 5 பேரை 4 மாதங்களுக்குப் பின்பு கைது செய்தனர். பின்னர், 5 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் கொலை குற்றத்துக்காக தலா ஒரு ஆயுள் சிறை தண்டனையும், கொள்ளை, தாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.