தமிழகம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை: ஒருநபர் ஆணையத்தில் ரஜினி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த், ஒருநபர் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம்ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடிமற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோரிடம், 26 கட்டங்களாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 27-வதுகட்ட விசாரணை தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 19-ம்தேதி முதல் நடைபெற்றது. இதுகுறித்து, ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியதாவது:

ஆணையம் சார்பில் இதுவரை1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், 719 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் 27-வதுகட்ட விசாரணையில் 48 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட 72 பேரிடமும் விசாரித்துள்ளோம்.

அடுத்தகட்ட விசாரணை மே 17 முதல் 5 நாட்கள் நடைபெறும். அப்போது, பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர், காயமடைந்த காவல் துறையினர் சாட்சியம் அளிக்கவுள்ளனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் குடியிருப்பில் வசித்தவர்கள், ஸ்டெர்லைட் ஊழியர்கள், அப்போதைய காவல் துறைகண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆணையம் சார்பில் கேள்விகள் எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டது. அதற்குரஜினிகாந்த் பதிலளித்து, சமர்ப்பித்துள்ளார். அதில், தூத்துக்குடியில் அன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு, திட்டமிட்ட சந்திப்பு அல்ல. அது எதிர்பாராத, தற்செயலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. எனவே, அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் திட்டமிட்டு எதுவும் சொல்லவில்லை. தூத்துக்குடியில் ஊர்வலம் தொடர்பாக எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ, பத்திரிகை மற்றும் ஊடக பதிவுகளோ தன்னிடம் இல்லை என்று ரஜினி கூறியுள்ளார்.

இருப்பினும் சில விளக்கங்களை அவரிடம் கேட்க வேண்டியுள்ளது. கரோனா நிலைமை சீரானதும், ஆணையத்தின் சில சந்தேகங்களையும், அவர் அளித்த பதில்கள் தொடர்பாக சில விளக்கங்களையும் ரஜினியிடம் கேட்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT