‘கரோனா இல்லா’ சான்றுடன்வரும் சுற்றுலா பயணிகளை நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
தற்போது சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், அதை மட்டும் நம்பி வாழும் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், பள்ளிக் குழந்தைகளின் கல்விக் கட்டணஙகளை செலுத்த முடியாமலும், வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா தலங்களை மூடியதால் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள், சவாரி வாகனங்கள், டாக்ஸி, படகு சவாரி உட்பட அனைத்தும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்துதான் அதிகபட்ச சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவது வழக்கம்.
தற்போதைய அறிவிப்பால் ஏராளமான சிறு, குறு தொழில்களும் முடங்கிவிட்டன. இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. சிறு, தொழில் செய்யும் ஏழைகளுக்கு மாதம் ரூ.7.500 நிவாரண உதவியாக அரசு வழங்க வேண்டும். அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க வேண்டும். கரோனா தொற்று இல்லா சான்றுடன் வரும்சுற்றுலா பயணிகளை மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
இந்த பெருந்தொற்று சீராகும் வரை கூலித் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள், ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி குழந்தைகளின் 2021-ம் ஆண்டு கல்விக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு முழு ஊதியத்தை அரசும், பள்ளி நிர்வாகமும் சரி பாதி வீதம் மாதம் தவறாமல் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்று, 50 சதவீத சுற்றுலா பயணிகளை அரசு அனுமதிக்க வேண்டும்" என்றார்.