பலாப்பழ விளைச்சல் அதிகரித் துள்ளதால் கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் பகுதிக்கு அதன் வரத்து அதிகரித்துள்ளது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் அதிகம் விளைகிறது. குளிர்ச்சியுடன் கூடிய வெப்பநிலை இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதால் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகம் விளைகின்றன.
கேரளாவைப் பொறுத்தவரை இடுக்கி, பத்தினம்திட்டா, கோட் டயம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் விளைச்சல் அதிகமாக உள்ளது. சங்கனாச்சேரி, கோட்டயம் உள்ளிட்டவை பலாப்பழத்துக்கான முக்கியச் சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்துக்கு அதிகளவில் பலாப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. கடந்த ஜனவரியில் பலா சீசன் தொடங் கியது.
தற்போது விளைச்சல் அதிகமாக இருப்பதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் வரத்து உள்ளது. கிலோ ரூ.30 முதல் ரகத்தைப் பொறுத்து ரூ.40 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து சின்னமனூர் வியாபாரி குமார் கூறுகையில், இன்னும் 3 மாதங்களுக்கு பலா வரத்து இருக்கும். தற்போது ஒட்டுரக பழங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அன்னாசி, தர்ப்பூசணி பழம் விற்று வந்தேன். தற்போது பலா வரத்து அதிகரித்துள்ளதால் இந்த வியாபாரத்துக்கு மாறி விட்டேன்.
பழத்தின் அளவுக்கு ஏற்ப ரூ.10-க்கு 3 சுளை என்று விற்கிறோம்.
பலா வரத்து அதிகரித்து ள்ளதால் நடைபாதை சிறு வியாபாரிகளுக்கு அன்றாடம் சீரான வருமானம் கிடைத்து வருகிறது என்றார்.