ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பொங்கல் பண் டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. விவ சாயத்துக்கு பயன்படும் மாடுகளை வணங்க மாட்டுப் பொங்கலும் வீரத்தை வெளிப்படுத்த ஜல்லிக் கட்டு போட்டியும் காலங்காலமாக நடந்து வருகிறது.
தவறான புரிதல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற் போதைய மத்திய அமைச்சர் மேனகா காந்தி விலங்குகள் நல வாரியத்தின் பொறுப்பில் இருந்தபோது ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்தப் பின்னணியில்தான் கடந்த 2011 ஜூலை 11-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம், காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளையும் சேர்த்தது.
ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி தொடர்ந்த வழக்குகளில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச் சகத்தின் அறிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இனி ஜல்லிக்கட்டு நடத்த முடியும்.
48 எம்.பி.க்களை வைத் துள்ள அதிமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக என பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொடர்ந்து கூறி வந்தனர்.
அவசர சட்டம்
ஆனால், கடந்த ஆண்டு ஜல் லிக்கட்டு போட்டியே நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதுபோல இந்த ஆண்டும் பாஜகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுபோல வெற்று பிரச்சாரம் செய்வதை கைவிட்டு அவசர சட்டம் மூலம் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.