திருநெல்வேலி- தென்காசி இடையே அமைக்கப்படும் நான்கு வழிச்சாலைக்காக மீண்டும் பசுமையான மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டாமல் நவீன தொழில்நுட்பத்துடன் இடம் மாற்றி நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் ஆட்சியருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
திருநெல்வேலி- தென்காசி இடையிலான நான்குவழி சாலைப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது இத்திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 45.6 கி.மீ. இருவழிப் பாதை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
திருநெல்வேலி - தென்காசி சாலையானது தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மிகமுக்கிய சாலை ஆகும். இச்சாலை வழியாக தினசரி 500- க்கும் மேற்பட்ட சிமென்ட், மரத்தடி, காய்கறி, சரக்கு லாரிகளும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் பொருட்களும் செல்கின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார தொடர்புக்கு இந்தச் சாலை மிகமுக்கியமானதாகும்.
குற்றாலம், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், சபரிமலை அய்யப்பன் கோயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பிரதான சாலையாக இது திகழ்கிறது.
கடந்த 2018 -ல் நான்கு வழிச்சாலை அமைக்க திருநெல்வேலி - தென்காசி இரு வழிச் சாலையின் ஓரத்தில் புளி, வேம்பு, வாகை மற்றும் நூற்றாண்டு பழமையான ஆலமரங்கள் உட்பட 1,160 முழுமையாக வளர்ந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை வெட்டியது. இப்போதும் சாலையின் இருபுறமும் உள்ள நிறைய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பாவூர்சத்திரத்துக்கும் தென்காசிக்கும் இடைப்பட்ட தூரத்தில் வளர்ந்து நிற்கும் 10 வயதுக்கும் குறைவான பசுமையான மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை உள்ளது.
மரங்களை வெட்டாமல் இயந்திரங்கள் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடம் மாற்றி நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாவூர்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு பதிலளித்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைக்கு உரிய நடவடிக்கைக்காக மனு அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘நவீன தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது.
மரங்களை வெட்டாமலே உயிருடன் பிடுங்கி இடம் மாற்றி நடுவதற்கு முடியும். அத்தகைய தொழில்நுட்பத்தில் பசுமையான இளம் மரங்களை இடம் மாற்றி நடும்போது நான்கு வழிச்சாலை பசுமையாக காட்சி அளிக்கும். சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும்’’ என்று தெரிவித்தனர்.