புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறக்கோரி ஆளுநர் தமிழிசைக்கு மனு தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாணவர், பெற்றோர் நல வாழ்வு சங்கத் தலைவர் பாலா இன்று ஆளுநர் தமிழிசையிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
’’மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் விதிமீறல் தொடர்பாக சிபிஐ, மத்திய மருத்துவ கமிட்டியிடம் புகார் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
மாணவர் சேர்க்கையில் விதிமீறல் தொடர்பாக மத்திய பொருளாதார குற்றவியல் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. பிற மாநிலங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 65 விழுக்காடு இடங்களையும், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களையும் பெறுகின்றனர். ஆனால், புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து 33 விழுக்காடு இடங்களை மட்டுமே அரசு ஒதுக்கீடாகப் பெறுகின்றனர்.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள உத்தரவுப்படி எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீடாக தனியார் கல்லூரிகள் தரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதனால் வரும் 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீடாக எம்பிபிஎஸ் படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களைப் புதுச்சேரி அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.