தமிழகம்

தேவையான அளவு ஆக்சிஜன், மருந்து, வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில், தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, தொழிற்சாலை தேவைகளுக்குப் பயன்படும் ஆக்சிஜனை மருத்துவத் தேவைகளுக்கு திசை மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது குறித்த தகவல் வெளியானது.

இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்குத் தமிழக அரசு தம் அதிருப்தியைத் தெரிவித்தது. இதுகுறித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்தவித ஆலோசனையையும் மாநில அரசுடன் நடத்தவில்லை.

பிற மாநிலங்களுக்கு உதவ தமிழக அரசு எப்போதும் தயாராகத்தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலும் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்” எனத் தெரிவித்தார்.

தற்போது இதுகுறித்து பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு வழக்கைக் கையிலெடுத்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டுத் தெரிவிக்க தமிழக தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ள நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதா? வென்டிலேட்டர் போதிய அளவு உள்ளதா? ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதா? தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதா? என வழக்கு விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தேர்தல் நடைமுறை உள்ளதால் அதிகாரிகள் அவசர காலகட்டத்தில் இடையூறின்றி முடிவெடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர், “மருந்துப் பற்றாக்குறை எதுவும் இல்லை. ரெம்டெசிவிர் மருந்து அதிகப்படியாகவே 31,000 என்கிற அளவில் உள்ளது. தனியார் மருத்துவமனையில்தான் பற்றாக்குறை உள்ளது. அதையும் அரசிடம் கேட்டால் தரத் தயாராக உளளோம்.

ஆக்சிஜனைப் பொறுத்தவரை போதிய அளவு உள்ளது பற்றாக்குறை எதுவும் இல்லை. தற்போது 1,167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தினமும் 400 டன் தமிழகத்திலும், புதுவையில் 150 டன்னும் தயாரிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 250 டன் மட்டுமே தேவை உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள 84 ஆயிரம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை.

9,600 வென்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளன. தனியார் மருத்துவமனையில் 6,000 வென்டிலேட்டர்கள் உள்ளன. எச்.எஃப்.என்.ஓ வென்டிலேட்டர்கள் 4000 எண்ணிக்கையில் உள்ளன'' என்று தெரிவித்தார்.

இதை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். வருகிற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் சுமுகமாகக் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். வேறு பயன்பாட்டுக்கு ஆக்சிஜனைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தடுப்பூசி விலையைக் குறைக்க வேண்டும். ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் விலையைக் குறைக்க வேண்டும். கடுமையான லாக்டவுனில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பொருளாதார ரீதியாக முடங்கியுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசியைப் பயன்படுத்தும் வகையில் விலையைக் குறைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT