தமிழகம்

சீதாராம் யெச்சூரி மகன் மறைவு: வைகோ, ராமதாஸ், ஜவாஹிருல்லா இரங்கல்

செய்திப்பிரிவு

சீதாராம் யெச்சூரி மகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி கோவிட் காரணமாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார். சென்னையில் இருக்கும் ஏசிஜே இதழியல் கல்லூரியில் பயின்ற அவர் ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி:

“தங்கள் அன்பு மகன் ஆசிஷ் யெச்சூரி கரோனா தாக்கி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்தி விட முடியாது. இப்பெரும் துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மீண்டு வரும் ஆற்றலை அளித்திட, இயற்கைத் தாயை இறைஞ்சுகின்றேன்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் பதிவு:

“மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு இந்த சோகத்தைத் தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட இரங்கல் செய்தி:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும், பத்திரிகையாளருமாகிய ஆசிஷ் யெச்சூரி இன்று காலை கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.

தோழர் சீதாராம் யெச்சூரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT